ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் - ரஜவுரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “நவ்ஷெரா, பிம்பர் காலி பகுதிகளில் காலை 8.45 மணியளவில் இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது” என்றார்.
ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டங் களிலும் பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தினர். இதில் சந்தோட் குடியிருப்பு பகுதியில் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதில் ரசா என்பவர் காயம் அடைந்தார். எல்லையில் பல்வேறு கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று முன்தினம் 5 முறை தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர்கள் இருவரும் பொதுமக்கள் 6 பேரும் காயம் அடைந்தனர்.