பணி நியமனம் செய்வதற்கு ஆன்லைனில் தேர்வுகளை நடத்தியதால், 4 லட்சம் மரங்கள் மற்றும் 319 கோடி தாள்களை ரயில்வே துறை பாதுகாத்துள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஆட்களை நியமிக்க, தேர்வு முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் பல்வேறு மொழிகளில் கேள்வித்தாள்கள் அச்சிடப்பட்டன. அதற்காக கோடிக்கணக்கான தாள்கள் (பேப்பர்) பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், முறைகேடுகளைத் தடுக்க தற்போது ‘ஆன்லைன்’ மூலம் தேர்வுகளை நடத்தி வருகிறது ரயில்வே. முதல் கட்ட தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு என 3 கட்டங்களாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய அளவில், 14 ஆயிரம் பணியிடங்களுக்கு 351 மையங்களில் ஆன்லைன் தேர்வை ரயில்வே நடத்தியது. இதில் 92 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 2.73 லட்சம் பேர் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றனர். உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அலுவலக பணிகளுக்காக அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 4 லட்சம் மரங்கள் மற்றும் 319 கோடி ஏ4 தாள்களை ரயில்வே பாதுகாத்து சுற்றுச்சூழலுக்கு உதவி செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
எழுத்துத் தேர்வில் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்வு ஜூன் 29, 30-ம் தேதிகளில் நடைபெற்றது. டிஜிட்டலுக்கு மாறியதால் இந்த தேர்வுகள் ஓரிரு நாளில் முடிந்துவிடும். பழைய முறையில் தேர்வு நடத்தப்பட்டால் 2 மாதங்களாகும்.
ஆன்லைனில் தேர்வு நடத்து வதால் நேரம் மிச்சமாகிறது, பணி நியமன தேர்வில் வெளிப் படைத்தன்மை உறுதியாகிறது. இதற்கு முன்னர் கேள்வித் தாள்கள் கசிந்தது உட்பட பல புகார்கள் எழுந்தன. அந்தப் பிரச்சினைகளுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தீர்வு காணப் பட்டுள்ளது. மேலும், முழு வெளிப்படையை உறுதி செய்ய, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் ஒரு வாரம் கழித்து ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. அவற்றை தேர்வு எழுதியவர்கள் பார்த்துக் கொள்ளும் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.
இறுதிக்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறும் 14 ஆயிரம் விண்ணப்ப தாரர்கள், வரும் செப்டம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் தீபாவளிக்கு முன்னர் அவர்கள் பணியில் சேர்ந்துவிடு வார்கள்.
இவ்வாறு ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறினர்.