இந்தியா

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே மோதல் கூடாது: உச்ச நீதிமன்றம் கருத்து

இரா.வினோத்

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத் தில் கர்நாடகா, தமிழகம் இடையே யான மாநிலங்களுக்கு இடையே மோதல் கூடாது என உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன.

இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் தரப்பில் ஆஜரான‌ மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் வாதிடும்போது, “காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு பாரபட்சமானது. நீர்ப்பாசன சட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அப்போதைய மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூரு மாகாணம் இடையே, 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் அநீதியானது. அதிகாரம் மிகுந்த ஆங்கிலேய அரசு, மைசூரு மகாராஜா அரசை ஒடுக்கி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகி விட்டன. ஆனால் காவிரி நடுவர் மன்றம் இந்த ஒப்பந்தங்களைப் பரிசீலித்து தீர்ப்பளித்துள்ளது.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இன்றைய சூழலை கருத்தில் கொண்டு நீரை பிரிக்க வேண்டும். கர்நாடகாவில் மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்கள் பெரிதானதைப் போலவே, தமிழகத்தில் விவசாய நிலமும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலத்துக்கு ஏற்றவாறு, காவிரி நீரை வழங்க முடியாது. அதிகளவில் சாகுபடி செய்வதால் தமிழகம் அதிகளவில் நீரை கேட்கிறது. எனவே இந்த பிரச்சினையில் இரு மாநிலங்களிடையேயும் மோதல் ஏற்படுகிறது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும்போது, “கர்நாடகாவும், தமிழகமும் இந்தியாவின் ஒரு அங்கம் தான். நீதிமன்ற உத்தரவையும், சட்டம் ஒழுங்கையும் எந்த மாநிலமும் மீறுவதை ஏற்க முடியாது. காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் கூடாது. நீருக்காக மாநிலங்கள் இடையே மோதல் உருவாவதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை.

காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே விசாரித்து உரிய தீர்ப்பு அளிக்கும். இவ்வழக்கை இனியும் புதிய நடுவர் மன்றத்துக்கு அனுப்ப மாட்டோம். காவிரி தொடர்பான வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது. எனவே மாநில அரசுகள் தங்களது இறுதிவாதத்தை உச்ச நீதிமன்றத்தின் முன்பாகவே வைக்க வேண்டும்” எனக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

கர்நாடகாவில் பாதுகாப்பு

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்றுவரும் நிலையில் கர்நாடகா வில் மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட் டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. நேற்று மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட‌ போலீஸார் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடிநீர் திறக்கப் பட்டுள்ளது. இதைக் கண்டித்து விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் மண்டியாவில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT