‘மழைக்காலக் கூட்டத் தொடரானது நாட்டின் நலனுக்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், எம்பி.க்கள் ஆரோக்கியமான விவாதத்தில் பங்கேற்கவும் வாய்ப்பாக அமையும் என உறுதியாக நம்புவதாக’ பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக சபைக்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (நேற்று) தொடங்குகிறது. கோடைக்குப் பிறகு மழையின் வருகையானது மண்ணில் புதிய இனிமையான வாசனையைத் தருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நாடாளுமன்றம் கூடுவதால், இந்தக் கூட்டத்தொடரானது புதிய ஊக்கத்தைக் கொடுக்கும்.
ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது அனைத்துக் கட்சிகளிடமும் இருந்த ஒற்றுமையான செயல்பாடு மழைக்காலக் கூட்டத்தொடரிலும் இருக்கும் என நம்புகிறேன். நாட்டின் நலனுக்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் ஆரோக்கியமான விவாதத்தில் பங்கேற்கவும் இந்தக் கூட்டத்தில் வாய்ப்பாக அமையும் என உறுதியாக நம்புகிறேன்.
இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. வரும் ஆகஸ்ட் 15-ம்தேதி இந்திய சுதந்திர தினத்தின் 70-வது ஆண்டு தினத்தைக் கொண்டாட உள்ளோம். அதேபோல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு (1942, ஆகஸ்ட் 8) 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய கடின உழைப்பை வழங்கும் நமது விவசாயிகளுக்கு தலை வணங்குகிறோம். அவர்களை நினைவில் வைத்து இந்த அமர்வு தொடங்குகிறது.
இவ்வாறு மோடி கூறினார்.
சோனியாவைத் சந்தித்த மோடி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று 5 நிமிடம் முன்னதாகவே அவைக்கு வந்தார். அப்போது எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கிச் சென்ற அவர் அவர்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோரைச் சந்தித்து தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.மேலும் முலாயம் சிங் யாதவ், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் நீண்டநேரம் அவர் பேசினார்.