தன் காதலியுடன் நெருக்கமாக இருந்த சமயத்தில், அவருக்குத் தெரியாமல் ரகசியமாக அவர்களின் நடவடிக்கைகளை செல்போனில் படம்பிடித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது டெல்லி நீதிமன்றம். டெல்லியில் ஓர் ஆணும் பெண்ணும் பழகி வந்தனர். அவர்கள் நெருக்கமாக இருந்த சமயங்களில் அந்த இளைஞர் ரகசியமாக செல்போனில் படம்பிடித்தார். அதைக் கொண்டு ஆபாசப் படக் காட்சி ஒன்றை தயாரித்தார்.
இந்த விஷயத்தை அறிந்த அந்தப் பெண், கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய நண்பர், தன்னை அவரது வீட்டில் வைத்துத் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை ரகசியமாகப் படம்பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்றம், ஒருவரின் சம்மதத்தோடு உறவு கொண்டாலும் கூட, அவரின் சம்மதம் இல்லாமல் நெருக்கமான தருணங்களைப் படம்பிடிப்பது குற்றம் என்று கூறியுள்ளது. மேலும், "ஒருவரின் தனிநபர் உரிமைகளை மற்றவர்கள் எப்போதும் மதிக்க வேண்டும். இந்த ஆபாசப் படக் காட்சி வெளியிடப்பட்டிருந்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை சீரழிந்திருக்கும். எனவே இது ஒரு கடுமையான குற்றம் ஆகும்" என்று கூறியுள்ளது.
ஆனாலும், இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் சம்மதத்தோடே இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதால், இது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.