நாகாலாந்து மாநிலத்தில் அரசியல் குழப்ப நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் புதிய திருப்பமாக முதல்வர் ஷிர்கோசெலி லெய்சீட்சு வரும் 15-ம் தேதிக்குள் தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யா உத்தரவிட்டுள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தின் ஆளும் நாகா மக்கள் முன்னணியின் முதல்வராக இருந்தவர் டி.ஆர்.ஜெலியாங். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என இவர் அறிவித்ததற்கு நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெலியாங் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி பதவி விலகி னார். இதையடுத்து புதிய முதல்வ ராக, நாகா மக்கள் முன்னணியின் தலைவர் லெய்சீட்சு பதவி யேற்றார்.
அவர் சட்டப்பேரவை உறுப்பின ராக இல்லாத நிலையில் அவரது மகன், தான் வெற்றி பெற்ற வடக்கு அங்காமி தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்தார். அவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, அந்தத் தொகுதியில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் லெய்சீட்சு போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டார்.
இந்நிலையில் அங்கு போட்டியிட நேற்று வேட்புமனுவையும் லெய் சீட்சு தாக்கல் செய்தார். இதற் கிடையே முன்னாள் முதல்வர் டி.ஆர். ஜெலியாங் தனக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்ப தால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். இதனால் அங்கு அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டது.
மேலும் முதல்வர் லெய்சீட்சு வரும் 15-ம் தேதிக்குள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பி.பி.ஆச்சார்யா உத்தரவிட்டுள்ளார்.
நாகாலாந்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. நாகா மக்கள் முன்னணிக்கு 47 உறுப்பினர்கள், பாஜகவுக்கு 4, சுயேச்சைகள் 8 என மொத்தம் 59 உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கு அங்காமி தொகுதி காலியாக உள்ளது.