இந்தியா

காவிரியின் குறுக்கே ரூ 5,912 கோடியில் மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட அனுமதி தேவை: ம‌த்திய அரசுக்கு திட்டவரைவு அறிக்கை அனுப்பியது கர்நாடகா

செய்திப்பிரிவு

காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகரை அடுத்து ராம்நகர் மாவட்டம் மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கர்நாடக அரசு முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கி, நீர்ப்பாசனத் துறை நிபுணர்களைக் கொண்டு விரிவான திட்ட வரைவு அறிக் கையை தயாரித்தது. அந்த அறிக்கையை கர்நாடக அரசு கடந்த ஜூன் 7-ம் தேதி மத்திய‌ நீர் வள ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. இத்துடன் கர்நாடக நீர்வளத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த புதிய அணையின் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவில் எவ்வித தடையும் ஏற்படாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. எனவே உச்ச நீதிமன்றத்தில் இந்த திட்டத்துக்கு தடை கோர முடியாது. எனவே கர்நாடக அரசின் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது.

மேகேதாட்டு திட்டத்துக்கு தமிழக அரசும், அரசியல் கட்சி களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசு இத் திட்டத்துக்கு அனுமதி கோரி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த விவகார‌த்தில் மத்திய அரசு என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி வழங்கும் படி கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த இருப்பதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT