தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடகாவில் விவசாய அமைப் பினர் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் காவிரி யிலும், அதன் துணை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய வற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியா மாவட்டத்தில் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து கணிச மாக உயர்ந்துள்ளது. இதேபோல கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
124.8 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை யின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 73.95 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 2,300 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. இதேபோல கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கால்வாய்கள் மூலம் காவிரியில் கலந்து, பிலிகுண்டுலு வழியாக சுமார் 1,500 கன அடி நீர் என்ற அளவில் தமிழகத்தை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.
விவசாயிகள் முற்றுகை
காவிரி நதி பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் விவசாய அமைப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல மைசூருவில் கர்நாடக விவசாய சங்கத்தினர் காவிரி ஆற்றில் இறங்கி, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் விவசாயிகள் கஸ்தூரி கன்னட அமைப்பினருடன் இணைந்து பெங்களூரு - மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.
இதையடுத்து 300-க்கும் மேற் பட்ட போலீஸார் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இருப்பினும் 2-ம் நாளாக நேற்றும் விவசாய அமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்தினர்.
அப்போது போராட்டக்காரர் களை தடுத்த போலீஸார், தமிழகத் துக்கு நீர் திறக்கப்படவில்லை என்று கூறி, போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்த விவசாய அமைப்பினர் சாலையில் அமர்ந்து இரு மாநில அரசுகளுக்கு எதிராக வும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காவிரி நீர் வாரிய ஆணைய அதிகாரிகள், மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நீர் திறக்க வில்லை என விளக்கம் அளித்துள்ளனர். இந்த அறிவிப்பை கர்நாடக விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் ஏற்க மறுத்துள்ளனர்.
இதனிடையே கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறும்போது, “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் இன்னும் வழங்கப்படவில்லை” என்றார்.