இந்தியா

மும்பையில் மாணவர்களின் முடியை கத்தரித்த பள்ளி நிர்வாகி, ஆசிரியர் கைது

பிடிஐ

மும்பை புறநகரில் மாணவர்களின் தலைமுடியை கட்டாயமாக கத்தரித்ததாக பள்ளி இயக்குநர், உடற்பயிற்சி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை புறநகர், விக்ரோலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் குட்டையாக முடி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பள்ளி விதியாக உள்ளது. இந்நிலையில் இதற்கு கட்டுப்படாத 25 மாணவர்களை தண்டிக்கும் வகையில் அவர்களின் தலைமுடி வெள்ளிக்கிழமை கட்டாயமாக கத்தரிக்கப்பட்டது. 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான இம்மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை காலை இறைவணக்க நிகழ்ச்சிக்கு பிறகு முடி கத்தரிக்கப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு கத்தரிக்கோல் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி இயக்குநர் கணேஷ் பட்டா (40), உடற்பயிற்சி ஆசிரியர் மிலிந்த் ஜாங்கே (33), அலுவலக உதவியாளர் துஷார் கோர் (32) ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்ரோலி காவல் நிலைய அதிகாரி ஸ்ரீதர் ஹன்சாட் தெரிவித்தார்.

''முடி திருத்திக்கொள்ளுமாறு மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன் கூறியுள்ளது. ஆனால் இதை செய்யத் தவறிய மாணவர்களுக்கு மூவரும் பாடம் கற்பிக்க முடிவு செய்தனர்'' என போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT