உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒன்றாக கைகோர்த்தால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் ஆட்டம் முடிந்து விடும் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒவ்வொருவரும் தங்களது கொள்கைகளுக்கு ஏற்ப பணியாற்றி வருகின்றனர். மாயாவதி, அகிலேஷ், ராபர்ட் வதேரா, பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால், லாலு என யாராக இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது.
ஒருவேளை ஒற்றுமை ஏற்பட்டால் அதை பிரிக்கவும் பாஜக விரும்புகிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகளின் வலிமை என்னவென்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் ஒருங்கிணைந்துவிட்டால், 2019-ல் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது, அது கனவாகி விடும் என்பதை பாஜக நன்கு தெரிந்து வைத்துள்ளது.
உத்தரபிரசேத முன்னாள் முதல்வர் அகிலேஷும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒன்றாக கைகோர்த்தால் 2019 தேர்தலில் பாஜகவின் ஆட்டம் முடிந்து விடும். அவர்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளும் வலுவாக உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.