ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, டெண்டர் நடைமுறையில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த 5-ம் தேதி சிபிஐ 5 வழக்குகள் பதிவு செய்தது. இது தொடர்பாக 12 இடங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ கூறியுள்ளது. இதில், லாலுவின் மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வியும் சிக்கியுள்ளதால் அவரது பதவி பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், கடந்த 2005-ல் ஐக் கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி சார்பில் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், தனது அமைச்சரவையில் ஜிதன்ராம் மாஞ்சியை (முன்னாள் முதல்வர்) சேர்த்தார். அடுத்த சில மணி நேரங்களில் மாஞ்சியின் பெயர் ஆசிரியர் கல்வி ஊழலில் வெளியானது. இதனால் மாஞ் சியை அமைச்சரவையில் இருந்து நிதிஷ் நீக்கினார். இதேவகையில் ஐஜத - பாஜக கூட்டணி ஆட்சி யில் 3 அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டனர்.
தற்போது தனது தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியிலும் நிதிஷ்குமார் அதேபோன்று செயல்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் பாலியல் வழக்கில் சிக்கிய லாலு கட்சியின் எம்எல்ஏவை சிறையில் தள்ளினார். பிஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த தனது கட்சி பெண் எம்எல்சியை கைது செய்தார். பிறகு அவரை கட்சியை விட்டு நீக்கினார்.
இதை குறிப்பிட்டு தேஜஸ்வி யின் துணை முதல்வர் பதவியை நிதிஷ் பறிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தேஜஸ்வியின் பதவி பறிக்கப்பட்டால், மெகா கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.
பாஜகவை நம்ப முடியாது
இது குறித்து ‘தி இந்து’விடம் நிதிஷ் கட்சி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “மோடி, அமித்ஷா ஜோடியை நம்பி பாஜகவுடன் கூட்டணி சேர முடியாது. இவர்கள் எந்த நேரமும் ஆட்சியை கவிழ்த்து தங்கள் கட்சியினரை முதல்வராக்கி விடுவார்கள். ஆனால் அதேசமயம் ஆட்சியில் அடிக்கடி தலையீடு செய்யும் லாலுவையும் நாங்கள் மிரட்டி வைக்க வேண்டியுள்ளது. இதனால் மெகா கூட்டணிக்கு எந்த ஆபத்தும் வர வாய்ப்பில்லை. ஆனால் தேஜஸ்வி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் அவர் பதவி விலக வேண்டியிருக்கும். இதை ஏற்பதை தவிர லாலுவுக்கு வேறு வழியில்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது” என்று தெரிவித்தனர்.