இந்தியா

அமர்நாத் தாக்குதலுக்குப் பிறகான காஷ்மீர் நிலவரத்தை மெஹ்பூபாவிடம் நேரில் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்

பிடிஐ

அமர்நாத் தாக்குதலுக்குப் பிறகான காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தியிடம் நேரில் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பு சனிக்கிழமை காலை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. சந்திப்பின்போது மெஹ்பூபா, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலை நாட்ட ராஜ்நாத் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல்

அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் படன்கூ மற்றும் கானாபால் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது ஜூலை 10-ம் தேதி இரவு தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அப்போது அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்துவிட்டு சோனா மார்க் பகுதியில் இருந்து திரும்பி கொண்டிருந்த யாத்ரீகர்கள் பேருந்து துரதிருஷ்டவசமாக குறுக்கே சென்றது.

இதில் பேருந்தில் சென்ற யாத்ரீகர்கள் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் பெண்கள். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT