இது கருத்தியலுக்கிடையேயான சண்டை. கருத்தியலுக்காகப் போராடுபவர்கள் யாரும் பலிஆடுகள் அல்ல. நான் ஒரு போராளி என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் கூறியுள்ளார்.
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 23-ம் தேதி ராம்நாத் கோவிந்தும், 28-ம் தேதி மீரா குமாரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்
பெங்களூரில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஆதரவு திரட்டிய மீரா குமார் பேசும்போது,
"இது கருத்தியலுக்கிடையேயான சண்டை. கருத்தியலுக்காகப் போராடுபவர்கள் யாரும் பலிஆடுகள் அல்ல. நான் ஒரு போராளி. குடியரசுத் தலைவர் தேர்தலில் 17 கட்சிகள் எனக்கு ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளன. உறுதியான கருத்தியல் நிலைப்பாட்டின்படி நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
தாழ்த்தப்பட்டோருக்கிடையே நிகழும் தேர்தலாக 2017 குடியரசுத் தலைவர் தேர்தல் பார்க்கப்படுகிறது.
கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சாதி விவாதிக்கப்படவில்லை. ஆனால் இக்குடியரசுத் தேர்தலில் சாதி பெரும் விவாதப் பொருளாக விவாதிக்கப்படுகிறது" என்றார்.