இந்தியா

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பஸ் விபத்து: பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம்

பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசும் அமர்நாத் கோயில் வாரியமும் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் காலையில் மாநில அரசுக்கு சொந்தமான பஸ் ஜம்முவிலிருந்து அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு அடிவார முகாமுக்கு புறப்பட்டது. ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், ராம்பன் மாவட்டம் நச்லானா பகுதியில் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 16 பேர் பலியாயினர். 29 பேர் காயமடைந்தனர். இதில் மோசமாக காயமடைந்த 20 பேர் ஜம்மு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, மாநில ஆளுநரும் அமர்நாத் கோயில் வாரிய தலைவருமான என்.என்.வோரா, பஸ் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் கோயில் வாரியம் சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுபோல, மத்திய அரசு சார்பில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT