இந்தியா

யோகி ஆதித்யநாத் ‘மனதைச் சுத்தம் செய்ய’ 150 கிலோ எடை கொண்ட சோப் பரிசு: தலித் பிரிவைச் சேர்ந்த 45 பேர் கைது

செய்திப்பிரிவு

உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு 150 கிலோ எடைகொண்ட மிகப்பெரிய சோப்பை பரிசாக அளிக்க குஜராத்திலிருந்து வந்த 45 தலித்துகள் ஜான்சியில் கைது செய்யப்பட்டனர்.

மிகப்பெரிய இந்த சோப்பில் புத்தபெருமானின் படம் பொறிக்கப்பட்டுள்ளது, இந்த சோப்பையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த மே மாதம் உ.பி.யின் குஷிநகர் மாவட்டத்தில் முதல்வரை சந்திப்பதற்கு முன்பாக குளித்து விட்டு சுத்தமாக வர வேண்டும் என்று 100 தலித் குடும்பங்களுக்கு உ.பி. அரசு சோப்புகளை வழங்கியது, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பெரிய சோப்பை யோகிக்கு பரிசாக அளிக்க தலித்துகள் குஜராத்திலிருந்து வந்தனர்.

உ.பி. போலீஸின் நடவடிக்கை இதோடு முடியவில்லை. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹஸ்ரத்கஞ்ச் பிரஸ் கிளப்பில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த தலித்துகள் 9 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்தனர்.

முதல்வர் யோகியின் ‘கறை படிந்த மனத்தை சுத்தம் செய்ய’ என்று இந்த சோப்பை அவருக்கு வழங்க குஜராத் தலித்துகள் திட்டமிட்டனர், ஆனால் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இவர்கள் ஜான்சியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் ஐபிஎஸ் ஆபீஸர் தாராபுரி, லக்னோ பல்கலைக் கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ராம்குமார், டாக்டர் ரமேஷ் தீட்சித், சமூக ஆர்வலர் ஆஷிஷ் அஸ்வதி ஆகியோர் அடங்குவர்.

தலித்துகள் மீது பாஜகவின் உண்மையான அணுகுமுறை என்னவென்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளதாக ஆஷிஷ் அஸ்வதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT