இந்தியா

பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து நோட்டு எண்ணும் இயந்திரங்கள் வாங்குவதா? ஆர்பிஐ மீது ப.சிதம்பரம் கிண்டல்

பிடிஐ

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு 8 மாதங்களுக்குப் பிறகு நோட்டுகள் எண்ணும் இயந்திரங்களை வாங்கியதாக மத்திய ரிசர்வ் வங்கி மீது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முத்ரா திட்டத்தின் கீழ் 7 கோடி பேருக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக அரசு கோரியுள்ளது, குறிப்பாக இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கோரியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கேலி செய்த ப.சிதம்பரம், “7.28 கோடி பேர் முத்ரா திட்டத்தின் கீழ் சுய வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்” - இன்று தொடங்கும் புராணத் தொடரின் தலைப்பே இது, திரைக்கதையாசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.

இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இவ்வாறு சாடியுள்ளார்.

SCROLL FOR NEXT