தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட பசு பாதுகாவலர்கள் இந்திய எல்லைக்குச் செல்ல வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலை செய்யும் சிற்பிகளுடனான சந்திப்பின்போது பேசிய தாக்கரே, ''ஒருவேளை அனந்த்நாகில் தீவிரவாதிகள் மாட்டிறைச்சியை தங்கள் பையில் எடுத்துச் சென்றிருந்தால், உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள். தீவிரவாதிகளுடன் போராட பசு பாதுகாவலர்களை ஏன் நம் எல்லைக்கு அனுப்பக்கூடாது?
தீவிரவாதிகள் இந்து தெய்வங்களை அச்சுறுத்துகின்றனர். அமர்நாத் தாக்குதலின்போது பால் தாக்கரேவை நினைத்துப் பார்க்கிறேன். இந்துக்கள் தாக்கப்பட்டால் மட்டுமே ஒன்றுகூடுகின்றனர். ஆனால் மற்ற நேரங்களில் அப்படியில்லை. ஏன் இந்துக்கள் அப்படி இருக்கின்றனர்?
இன்றைய காலகட்டத்தில் சிவசேனா மட்டுமே இந்து கடவுள்களைக் காப்பாற்றி வருகிறது.
ஏன் இந்துக்கள் பண்டிகைகளின்போது மட்டுமே பிரச்சினை தலைதூக்குகிறது? மசூதியில் சத்தம் வரும்போது மட்டும் யாரும் குற்றம் சொல்வதில்லை. விநாயகர் சதுர்த்தி மட்டும் ஏன் பிரச்சினையாக இருக்கிறது?
திருவிழாக்களின்போதும் நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டால், அந்த அமைதி, சுடுகாட்டில் இருப்பதற்குச் சமமாகும்'' என்று தெரிவித்தார்.