காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு கடந்த ஜூன் 29-ம் தேதியில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துள்ளது. இதற்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கன்னட அமைப்பினர் கர்நாடக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். கர்நாடக மாநில விவசாய சங்கத்தினரும், காவிரி நதி நீர் பாதுகாப்பு குழுவினரும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளதால் மாண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடக்கத்தில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி திறக்கப்பட்ட நிலையில், கடந்த 2-ம் தேதி வினாடிக்கு 6400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல ரங்கப்பட்டினாவில் மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், நீர்வளத் துறை அமைச்சர் எம்.பியான பாட்டீலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
கர்நாடக விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக நேற்று தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டது.நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடிநீரும் தமிழகத்துக்கு திறக்கப்படுகிறது.