இந்தியா

நாடாளுமன்ற துளிகள்: வன்முறையில் ஈடுபடுவோர் மீது கட்டாய வழக்கு

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அளித்த பதில்கள் வருமாறு:

பயிர் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை

மத்திய வேளாண் துறை இணையமைச்சர் புருஷோத்தம் ருபாலா: விவசாயிகளின் பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. அதேநேரம், வேளாண் கடன்களுக்கு தொடர்ந்து வட்டி மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் (1 ஆண்டு) வழங்கப்படும். இதையே உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால் 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

வன்முறையில் ஈடுபடுவோர் மீது கட்டாய வழக்கு

உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர்: சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, தனிநபரின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது, மாட்டிறைச்சி உண்பவர் மற்றும் கால்நடை வர்த்தகர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே, பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கட்டாயம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன எல்லையை ஒட்டி 73 சாலைகள்

உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு: இந்திய - சீன எல்லையை ஒட்டி 73 சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் 46 சாலைகளும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் 27 சாலைகளும் அமைக்கப்படுகின்றன. இதுவரை 30 சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. மலைப்பாங்கான பகுதி, இயற்கைச் சீற்றங்கள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பணிகள் தாமதமாகி வருகிறது.

1,000 தொண்டு நிறுவனங்களுக்கு தடை

உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு: வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நன்கொடையை தவறாக பயன்படுத்தியது மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதற்காக 1,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனங்கள் இனி வெளிநாடுகளிடமிருந்து நன்கொடை பெற முடியாது.

SCROLL FOR NEXT