இந்தியா

பிஹாரில் ‘கொலையுண்டவர்’ பஞ்சாபில் உயிருடன் சிக்கினார்: ஆயுள் தண்டனை 4 பேர் விடுதலையாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

பிஹாரில் கொலை செய்யப்பட்டு இறந்ததாகக் கருதப்பட்டவர் பஞ்சாப் மாநிலத்தில் உயிருடன் சிக்கினார்.

இதையடுத்து, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 4 பேர் விரைவில் விடுதலையாக உள்ளனர்.

பிஹார் மாநிலம், நவாதா மாவட்டத்தின் சகார்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் உமா சிங் (70). அங்கு 1983-ம் ஆண்டு ஜெயந்த் சிங் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உமா சிங், 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், உமா சிங்கை கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி தமது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தி கொலை செய்துவிட்டதாக அவரின் மகன் விஜய் சிங், அங்குள்ள அக்பர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நரேஷ் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் இந்திரதேவ் சிங், சுரேந்தர் சிங், சோட்டான் சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலையுண்டதாகக் கருதப்பட்டவரின் உடல் கிடைக்காத நிலையிலும், கிராமத் தினரை நம்பவைப்பதற்காக உமா சிங்கின் இறுதிச்சடங்குகளை அவரது குடும்பத் தினர் செய்துள்ளனர்.

5 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதியில், நரேஷ் சிங் உள்ளிட்ட நால்வருக்கும் நவாதா நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. நால்வரும் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது, உமா சிங்கின் குடும்பத்தினர் அடிக்கடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்று வந்தது நரேஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொலையுண்டதாக கருதப்பட்ட உமா சிங், பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்தின் கேலான் கிராமத்தில் மோகன்தாஸ் என்ற பெயரில் கோயிலில் பூசாரியாக இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நரேஷ் சிங் தெரிவித்தார்.

இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் நரேஷ் சிங் கூறியதாவது:

மோகன்தாஸ் என்ற பெயரில் உமா சிங் பஞ்சாபின் கேலான் கிராமத்தில் இருப்பதை அறிந்த பின்பு, அதை உறுதிப்படுத்த நான்கு முறை அங்கு சென்று வந்தேன். பின்னர், ஆதாரங்களை திரட்டி நவாதா நீதிமன்றத்தில் அளித்தேன். நீதிபதியின் உத்தரவின் பேரில், கடந்த 5-ம் தேதி உமா சிங்கை கைது செய்து போலீஸார் அழைத்து வந்தனர்.

நிலத்தகராறு காரணமாகத்தான் எங் களை இந்த பொய்யான கொலை வழக்கில் உமா சிங்கின் உறவினர்கள் சிக்கவைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நவாதா நீதிமன்றத்தில் உமா சிங்கை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இப்போது கைது செய்யப்பட்டுள்ள மோகன்தாஸ்தான் உமா சிங் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்த பிறகு, அது தொடர்பான தகவல் பாட்னா உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்படும். அதன் பிறகுதான் கொலை வழக்கிலிருந்து நரேஷ் சிங்கும், அவரது சகோதரர்களும் விடுதலையாவார்கள் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT