இந்தியா விடுதலைப் பெற்று 67 ஆன பிறகும் நாட்டின் சட்டப் புத்தகத்தில் 2-ம் உலகப் போருக்கு முந்தைய சட்டங்கள் காணப்படுகின்றன.
இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் குற்ற நடைமுறை (திருத்த) சட்டம் -1938 பிறப்பிக்கப்பட்டது. ஆங்கிலேய பேரரசு தொடர்புடைய போர்களில் பங்கேற்க வேண்டாம் என மக்களை தூண்டுவோருக்கு தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.
இரண்டாம் உலகப்போருக்கு முன் இந்தியாவில் ஆயுதப்படைகளுக்கு ஆங்கிலேய அரசு ஆட்களை திரட்டியது. இந்நிலையில் ஆயுதப்படையில் சேரவேண்டாம் என பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதுபோன்ற காலத்துக்கு ஒவ்வாத 73 சட்டங்களை நீக்குவதற்கு, சட்ட ஆணையம் தனது 3-வது இடைக்கால அறிக்கையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் சட்ட ஆணையத்தால், நீக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள காலாவதியான சட்டங்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.
இந்து வாரிசுரிமை (இயலாதவர்களை நீக்குதல்) சட்டம் – 1928 என்ற சட்டமும் நீக்குவதற்கு சட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் -1956, பிரிவு 28-ல் காணப்படுவதால் முந்தைய சட்டம் தேவையற்றது என சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது