இந்தியா

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி

செய்திப்பிரிவு

உ.பி.யில் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் பற்றி பேசுவதற்கு மாநிலங்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. இதன் இரண்டாது நாளான செவ்வாயன்று உ.பி.யில் தலித்துகள் தாக்கப்படும் விவகாரத்தை மாநிலங்களவையில் மாயாவதி எழுப்பினார். அவர் பேசும்போது ““நாடு முழுவதும் சாதியவாதமும், முதலாளித்துவமும் வளர்ந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த நிலை உள்ளது. தலித் மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்” என்றார்.

மாயாவதி 3 நிமிடம் மட்டுமே பேசுவதற்கு அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அனுமதி அளித்தார். ஆனால் அவர் 3 நிமிடங்களை கடந்து பேசிக்கொண்டிருந்ததால் அதை, பிஜே.குரியன் அனுமதிக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மாயாவதி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறிவிட்டு அவையிலிருந்து வெளியேறினார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, “மாயாவதி அவையை அவமதிக்கிறார். அவைத் தலைவருக்கு சவால் விடுகிறார். மாயாவதி தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரத்தால் அவையில் அமளி ஏற்பட்டதால் அவை நண்பகல் பகல் வரை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு வெளியில் மாயாவதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பேசவே நான் இந்த அவைக்கு வந்துள்ளேன். ஆனால் அவர்களின் பிரச்சினைகளை பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றால் பிறகு இதற்காக இங்கு வரவேண்டும். எனவே எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். சட்ட அமைச்சர் என்ற முறையில் இந்து விதிமுறைகள் மசோதாவை தாக்கல் செய்ய பாபாசாஹேப் அம்பேத்கர் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். நான் அவரது சிஷ்யை. நானும் அவையில் பேச அனுமதிக்கப்படாததால் நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

இந்நிலையில் மாலை சுமார் 5 மணிக்கு மாயாவதி தனது ஆதரவாளர்களுடன் சென்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

SCROLL FOR NEXT