இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: டார்ஜிலிங்கில் இளைஞர் பலி - பதற்றத்தால் ராணுவம் குவிப்பு

பிடிஐ

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தனி கூர்க்காலாந்து கேட்டு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) சார்பில் போராட்டம் நடந்து வரும் நிலையில், போலீஸார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பதற்றம் அதிகரித்ததால், மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

சோனாடா பகுதியில் நேற்று அதிகாலை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் தாஷி பூட்டியா என்ற இளைஞர் பலியானதாகவும் ஜிஜேஎம் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால் போலீஸ் உயரதிகாரிகள் இந்த தகவலை மறுக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர திகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இது வரை போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்ததாக எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பின் முழு தகவலையும் தெரிவிப்போம்’’ என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜிஜேஎம் அமைப்பினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து ஜிஜேஎம் தலைவர் வினய் தமாங் கூறும்போது, ‘‘எந்த காரணமும் இல்லாமல், அந்த இளைஞரை போலீஸார் கொன்றுள்ளனர். அவரது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. இந்த குற்றத்தில் ஈடுபட்ட போலீஸாருக்கு அரசு தக்க தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.

இளைஞர் உயிரிழந்த தகவல் பரவியதும், நூற்றுக்கும் மேற்பட்ட கூர்க்காலாந்து ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரும், போலீஸாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சோனாடா பகுதியில் போலீஸ் சோதனை சாவடிக்கும், ரயில் நிலையத்துக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் டார்ஜிலிங் மற்றும் சோனாடாவில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீண்டும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சவுக்பஜார் பகுதியில் சடலத்தை ஊர்வலமாக சுமந்து சென்று ஜிஜேஎம் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதற் கிடையே கூர்க்காலாந்து போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு நேற்று முன்தினம் தெரிவித்தது.

தொடர்ந்து 24-வது நாளாக போராட்டம் தொடர்வதால், டார்ஜிலிங் மற்றும் இதர மலைப் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் பாதிப் படைந்துள்ளன. மருந்து கடை களை தவிர, பிற கடைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மம்தா அழைப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறும்போது, ‘‘கூர்க்காலாந்து விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுதயாராக உள்ளது. ஆனால் அமைதி நிச்சயம் அமல்படுத் தப்பட வேண்டும். 10 தினங்களுக் குள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்தால், அனைத்து கட்சிகளை யும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம். எனினும் முதலில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT