இந்தியா

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

கே.சி.கோபகுமார்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

இதுகுறித்த ஜாமீன் மீதான மனுவின் விசாரணையில் வாதிட்ட வழக்கு விசாரணையின் தலைவர் மஞ்சேரி ஸ்ரீதரன், ''வழக்கின் 11-வது குற்றவாளியாக திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் நடந்த சம்பவத்துக்கு அவரே மூளையாக செயல்பட்டுள்ளார்.

வழக்கின் மீதான சிறப்பு விசாரணைக் குழுவின் ஆய்வில், குற்ற சம்பவத்தில் திலீப் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி அழைப்புகளின் பதிவு மூலமும், சாட்சிகளின் கூற்றுகளின் வழியாகவும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால் உரிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே திலீப் கைது செய்யப்பட்டார்.

ஒருவேளை திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்துவிடக் கூடும்'' என்றார்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த பிரபல கேரள நடிகையை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக பல்சர் சுனில் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட், அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். ஆலுவா சிறையில் அடைக்கப்பட்ட திலீப், கேரள நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து வருகிறார்.

SCROLL FOR NEXT