இந்தியா

மாயாவதியின் ராஜினாமா, அரசியல் செல்வாக்கை மீட்கவா?

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் குறித்து மாயாவதி (61) நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசினார். அப்போது அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், மாயாவதியை 3 நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாயா வதி, தன்னை பேச அனுமதிக் காததைக் கண்டித்து உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி வெளியேறினார்.

பின்னர் எதிர்கட்சித் தலைவர் களின் சமாதானத்தை ஏற்காமல் ராஜினாமா கடிதத்தை மாநிலங் களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் உ.பி.மற்றும் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதன் பின்னணியில் தலித் சமூகத்தினர் இடையே பகுஜன் சமாஜ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சி இருப்பதாக கருதப்படுகி றது. உ.பி.யில் கடந்த 2012-ல் சமாஜ்வாதி கட்சியிடம் மாயாவதி ஆட்சியை பறிகொடுத்த பின் அவரது இறங்குமுகம் தொடங்கியது. அடுத்து வந்த 2014 மக்களவை தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் மாயாவதியின் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. எனினும் உ.பி.யின் பிரதான எதிர்க்கட்சியாக தொடர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியால் 2017-ல் ஆட்சிக்கு வரமுடியவில்லை. 2017-ல் உ.பி. சட்டப்பேரவையில் அக்கட்சிக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மாயாவதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிவுக்கு வரும் நிலையில், அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது கட்டாயம் ஆனது.

பாஜகவுக்கு எதிராக செயல்பட்டாலும், அக்கட்சிக்கு எதிரான பிற கட்சிகளுடன் சேராமல், மாயாவதி தனித்து செயல்பட்டு வந்தார். ஆனால் பாஜகவின் உயர்ந்து வரும் செல்வாக்கால் எதிர்க்கட்சிகளுடன் கைகோக்க வேண்டிய கட்டாயத் துக்கு ஆளானார். இந்நிலையில் மாயாவதியின் ராஜினாமா, சரிந்துவரும் அவரது செல்வாக்கை மீட்கும் முயற்சி என கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மாயாவதி கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வட்டாரம் கூறும்போது, “உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின், எங்கள் பரமவிரோத கட்சியான சமாஜ்வாதி யுடன் கைகோக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை ஏற்க மனமில்லாத எங்கள் சகோதரி, தாம் இழந்த செல்வாக்கை மீட்க முடிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தால் நாங்கள் கேட்காமலே பிஹாரில் இருந்து சகோதரியை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப லாலு முன்வந்துள்ளார். தொடக்கத்திலேயே கிடைத்த இந்தப் பலனை போல, உ.பி. தலித்துகள் மனதிலும் அவருக்கு இடம் கிடைக்கும். இதை உறுதி செய்ய உ.பி.யில் வரவிருக்கும் இரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில், பூல்பூரில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

உ.பி. எம்.பி.க்களான யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் முறையே உ.பி. முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆனதால் இவர்களின் மக்களவை தொகுதிகள் காலி யாகின. இவற்றுக்கு அடுத்த சில மாதங்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதில் அலகாபாத் அருகிலுள்ள பூல்பூரில் தலித்துகள் கணிசமாக உள்ளனர். எனவே இங்கு தாம் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக மாயாவதி கருதுகிறார். அடுத்து 2019-ல் வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட மாயாவதி தயாராகி வருகிறார். வழக்கமாக ஓராண்டுக்கு முன் தேர்தலுக்கு தயாராகும் மாயாவதி, இம்முறை 2019 தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் தயாராகி வருகிறார். இந்த விஷயத்திலும் தற்போதைய ராஜினாமா, மாயாவதிக்கு பலன் அளிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சில விதிமுறைகள் உள்ளன. இதை மாயாவதி கடைப்பிடிக்காத காரணத்தால் அவரது ராஜினாமா ஏற்கப்படாமல் போகவும் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT