இந்தியா

வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை: நொய்டா தலைமைப் பொறியாளரின் காரிலிருந்து ரூ.12 கோடி சிக்கியது - வீட்டிலிருந்து 2 கிலோ வைர நகைகள், ரூ.12 லட்சம் பறிமுதல்

பிடிஐ

வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் டெல்லியை அடுத்த நொய்டாவின் தலைமைப் பொறியாளரின் காரிலிருந்து ரூ.12 கோடி ரொக்கம் சிக்கியது.

இதுகுறித்து வருமான வரித் துறை இயக்குநர் ஜெனரல் கிருஷ்ணா சைனி கூறியதாவது:

நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ்வே வளர்ச்சி ஆணைய தலைமைப் பொறியாளராக இருப்பவர் யாதவ் சிங். இவர் கட்டுமான திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதற்காக லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நொய்டாவில் உள்ள அவரது பங்களாவில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்த இந்த சோதனையில், சோஃபாவில் ஒரு சாவி மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அது பங்களாவுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாவி என தெரியவந்தது. அதைத் திறந்து பார்த்தபோது, அதில் ரூ.12 கோடி ரொக்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்துள்ளோம்.

மேலும் அவரது வீட்டிலிருந்து ரூ.12 லட்சம் ரொக்கம், 2 கிலோ வைர நகைகளும் கைப்பற்றப் பட்டுள்ளன. யாதவ் சிங்கின் மனைவி குசும் லதா, மீனு கிரியேஷன்ஸ் (டிசைனர் துணிகள்) இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். எனவே, அவரது வர்த்தக பங்குதாரரான அனில் பெஷாவ்ரிக்கு சொந்தமான இடத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.12.5 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பங்குகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குசும் லதா ஏற்கெனவே இயக்குநராக பதவி வகித்த மெக்கான் இன்ஃப்ரா நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திர மனோச்சாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் 13 வெவ்வேறு வங்கிகளில் உள்ள யாதவ் சிங்குக்கு சொந்தமான 13 லாக்கர்கள் சீல் வைக்கப்பட் டுள்ளன. அத்துடன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் யாதவ் சிங் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

யாதவ் சிங், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர் என கருதப் படுகிறது. அவரது ஆட்சியின் போது, கட்டுமான ஒப்பந்தங்களை வழங்கியதில் நடைபெற்ற ரூ.954 கோடி ஊழலில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கடந்த 2012-ம் ஆண்டு யாதவ் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அடுத்த 15 நாட்களில் அவர் மீண்டும் பணியில் அமர்த் தப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT