வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப் பட்டுள்ள தன்னார்வ அமைப்புகளில் (என்ஜிஓ), 18,523 அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாததை உள்துறை அமைச்சகம் கண்ட றிந்தது. இந்த அமைப்புகளுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பாக ஜூன் 14-ம் தேதிக்குள் வரவு-செலவு கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்ட உள்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மே மாத மத்தியில் இருந்து மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் தொடர்ந்து தகவல் அனுப்பியது.
இந்நிலையில் போதிய காலஅவகாசம் அளித்தும் 5,922 அமைப்புகள் 3 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கான வரவு-செலவு கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யாததை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது.
இதையடுத்து இந்த அமைப்பு களுக்கு விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் கடந்த 8-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் எப்சிஆர்ஏ சட்டத்தின் கீழ் உங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்கப்பட்டுள் ளது. இதற்கு வரும் 23-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “வரும் 23-ம் தேதிக்குள் பதில் அளிக்காத நிறுவனங்கள் மீது எப்சிஆர்ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கான அவற்றின் உரிமம் ரத்து செய்யப் படும்” என்றார்.
நாட்டில் எப்சிஆர்ஏ சட்டத்தின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் எப்சிஆர்ஏ இணைய தளத்தில் ஆண்டுதோறும் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும்.