இந்தியா

ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

செய்திப்பிரிவு

ஜி20 மாநாட்டில் ஜப்பான், கனடா, இத்தாலி, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

முதல்நாளில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, பிரேசில் அதிபர் மைக்கேல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ ஆகியோரை தனியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டாம் நாளான நேற்று இத்தாலி பிரதமர் போலா ஜென்டிலோனி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே மற்றும் மெக்ஸிகோ, அர்ஜென்டினா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களைச் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

இவர்கள் தவிர மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்டோருடனும் பிரதமர் மோடி அதிகாரபூர்வமற்ற வகையில் நீண்டநேரம் பேசினார்.

மோடிக்கு ட்ரம்ப் முன்னுரிமை

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அந்த அமைப்பின் தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலானியா ஆகியோர் முன்வரிசையில் நிற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

முன்வரிசையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்லா மெர்கெல் அவரது கணவர் ஜோசிம், அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, அவரது மனைவி ஜூலியா, சீன அதிபர் ஜி ஜின்பிங் அவரது மனைவி பெங் உள்ளிட்டோர் நின்றிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி 2-வது வரிசையில் நின்றிருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வரிசையை தவிர்த்து 2-வது வரிசைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் நின்று கொண்டார். இந்த சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT