இந்தியா

பெருகி வரும் தடை செய்யப்பட்ட ஐஎம்ஈஐ எண் இல்லாத செல்போன்கள்: நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு மெத்தனம்

செய்திப்பிரிவு

செல்போன் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரும் பொருட்டு 15 இலக்கம் கொண்ட சர்வதேச செல்போன் கருவியின் அடையாள எண் (ஐஎம்ஈஐ) உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு செல்போனிலும் இந்த எண் பொறிக்கப் பட்டு இருக்கும். அதில் சிம்கார்டு போட்டு பேசுவதன் மூலம், இந்த எண் அதில் பதிவாகி விடும். செல்போன் திருடப்பட்டு வேறு சிம் கார்டை பொருத்தி பேசினாலும் அந்த எண் பதிவாகும். இதை வைத்து அந்த செல்போனை பயன்படுத்துபவரை எளிதில் பிடிக்க முடியும்.

எனவே, ஐஎம்ஈஐ எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது. எனினும், இந்த எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவோர் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கிரிமினல் குற்றங்களுக்காக பயன்படுத்தப் படும் செல்போன்கள் மட்டுமே அதன் சிம் கார்டு நிறுவனங்களின் உதவியால் போலீ ஸாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட ஐஎம்ஈஐ எண்கள் இல்லாத செல்போன்களை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டுவதில்லை.

இதனால், தடையை மீறி அந்த வகை செல்போன்கள் சீனாவிலிருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துடன், திருடப்படும் செல்போன்களின் ஐஎம்ஈஐ எண்களையும் சில கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களின் உதவியால் மாற்றும் வேலைகளும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் டெல்லி காவல் துறையின் கூடுதல் ஆணையர் ராஜன் பகத் கூறும்போது, “ஐஎம்ஈஐ எண்கள் இல்லாத செல்போன்கள் பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு தகவல் வந்தால் அதைக் கைப்பற்றி விடுகிறோம். இப்படி பிடிப்பட்ட செல்போன்களின் புள்ளிவிவரங்கள் எங்களிடம் இல்லை. இவை இறக்குமதி செய்யப்படுவதை சுங்கத் துறை அதிகாரிகளால்தான் தடுக்க முடியும்” என்றார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் உ.பி.யின் ரேபரேலி மாவட்டக் காவல் துறை சிறப்புக் கண்காணிப்பாளார் என்.கொளஞ்சி கூறும்போது, “சிம் கார்டுகளை பயன் படுத்தாமல் போன் செய்ய முடியாது என்பதால், அதை வைத்து ஐஎம்ஈஐ எண்களை கண்டுபிடிக்கலாம்.

அந்த எண் இல்லாமல் பேசப் பயன்படும் செல்போன்களையும் கண்டுபிடிக்க வழி உண்டு. இதற்கு சம்மந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம். இதற்காக அரசு, அனைத்து செல்போன் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் ஒத்துழைப்புடன், ஐஎம்ஈஐ எண் இல்லாத செல்போன்களில் பேசுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்கத் தொடங்கினால் குற்றங்களை எளிதாகத் தடுக்க லாம்” என ஆலோசனை கூறுகிறார்.

SCROLL FOR NEXT