பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாத சூழல் நிலவும் நிலையில், ராஜஸ்தானில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஏடிஎம்மில் இருந்து ரூ.3,500-க்கு பதிலாக 70 ஆயிரம் ரூபாய் பணம் கொட்டியிருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூர் அருகே தோங் பகுதியில் வசித்து வருபவர் ஜிதேஷ் திவாகர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டு அருகில் உள்ள பரோடா வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றார். தனக்கு தேவையான ரூ.3,500 பணத்தை எடுப்பதற்கான பொத்தான்களை அழுத்திவிட்டு காத்திருந்த திவாகருக்கு அடுத்ததாக நிகழ்ந்தது பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்கும் பணத்தை மட்டுமே வழங்கும் அந்த ஏடிஎம் இயந்திரம் திவாகருக்கு மட்டும் அள்ளி அள்ளிப் பணத்தை வழங்கியது. மொத்தம் ரூ.70 ஆயிரம் அவரது கைகளுக்கு வந்தது.
எனினும் தனது நேர்மையை விட்டுக் கொடுக்காத திவாகர் இதுகுறித்து உடனடியாக அருகில் இருந்த பரோடா வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் உடனடியாக அங்கு வந்த வங்கி அதிகாரிகள், அந்த ஏடிஎம் மையத்தை மூடினர். மொத்தம் ரூ.6.76 லட்சம் அந்த இயந்திரத்தில் நிரப்பப்பட்டிருந்ததாகவும், அடை யாளம் தெரியாத 10 பேர் கூடுதல் பணத்தை எடுத்துச் சென்றிருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.