உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியாணா, டெல்லி தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான கருத்தரங்கு டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்காக போட்டி போடுகின்றன. இதை மக்கள் முடிவு செய்வார்கள்.
ஊழல், கறுப்புப் பணத்தில் திளைக்கும் சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஒழுக்கக் கேடான இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போது, மக்களின் மொழியில் நாம் பேச வேண்டும். ஆனால், முதல்வர் அகிலேஷ் யாதவ் சர்ச்சைக்குரிய (குஜராத்தின் கைதிகள்) வகையில் பேசி உள்ளார். இது மக்களின் மொழி அல்ல'' என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
குஜராத் சுற்றுலா துறையின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார். இதன் அடிப்படையில், கழுதைகள் சரணாலயத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பான டிவி விளம்பரத்தில் அவர் தோன்றுகிறார். இந்நிலையில், குஜராத் கழுதைகளுக்காக விளம்பரத்தில் தோன்றுவதை அமிதாப் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அகிலேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.