இந்தியா

நெடுஞ்சாலை மதுபானக் கடைகள், பார்கள் மூடல் உத்தரவும் பலதரப்புப் பிரச்சினைகளும்

கவுதம் பாட்டியா

பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரபல அமெரிக்க சட்ட தத்துவவாதி லோன் ஃபுல்லர் என்பவர் ‘பலதரப்புப் பிரச்சினைப்பாடுகள்’ (Polycentric problems) என்ற புதிய சொல்லாக்கத்தை உருவாக்கினார். சில சமூகப் பிரச்சினைகள், ஃபுல்லரைப் பொறுத்தவரை சிக்கல் நிறைந்த ஒன்றையொன்று சார்ந்து பின்னிப் பிணைந்த உறவுகள், தொடர்புகள் சார்ந்தது, எனவே இதில் ஒன்றை மாற்றம் செய்தால் முடக்கினால் மற்றவைகளிடத்தில் இது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என்பதே.

பலதரப்புப் பிரச்சினைகள் என்பது சிலந்தி வலை போன்றது. இதில் ஒரு இழையை உருவுதல் என்பது மற்றதன் மீது டென்ஷனை பரவலாக்கி வலை முழுதையுமே பிரச்சினைக்குள்ளாக்கி விடும். ஃபுல்லரைப் பொறுத்தவரை நீதித்துறை என்பது பலதரப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பொறுத்தமற்ற ஒரு அமைப்பாகும். ஒரு பலதரப்புச் சிலந்திவலை உறவுகளில், தொடர்புகளில் ஒரு உத்தரவு ஏற்படுத்தும் பலவிதமான பிரச்சினைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளும் முகமாக நீதித்துறையின் நடைமுறைகள் இருப்பதில்லை. மேலும் நீதித்துறைக்கு இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கான நேரமும் இல்லை அதற்கான ஆதாரங்களையும் அது தேடாது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுபானக் கடைகள், பார்கள். மதுவிற்பனை நிலையங்கள் என்று எதுவும் இருக்கக் கூடாது என்ற உத்தரவு இணை விளைவுகளை உருவாக்கியுள்ளது, கோவா போன்ற சுற்றுலாவை நம்பிய மாநிலங்களில் பெரிய அளவுக்கு இதனால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலருக்கு வாழ்வாதாரங்கள் பாதித்துள்ளது ஆகியவை பலதரப்பு பிரச்சினைப்பாடுகளின் இரண்டு உதாரணங்கள் மட்டுமே. இதன் விளைவுகள் இன்னும் சிக்கலானது வலைப்பின்னலானது.

ஃபுல்லரின் கருத்தாக்கமான பலமைய பிரச்சினைப்பாடுகள் என்ற வலைப்பின்னல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இது அதிகாரங்களை ஆட்சியதிகாரப்பிரிவு, சட்டமியற்றுபவர்கள் பிரிவு, நீதித்துறை பிரிவு என்று அழகாகப் பிரித்து வைத்துள்ளது. இதில் கொள்கை உருவாக்குதல் என்பது ஆட்சியதிகாரத்தின் கையில் உள்ளதாகவே அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இதனால்தான் சில நாட்களாக உச்ச நீதிமன்ற்த்தின் இந்த உத்தரவு கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இதன் பலமைய விளைவுகள் தவிர மதுவிற்பனைத் தடை, எந்த தூரத்தில் மதுக்கடைகள் இருக்கலாம் என்பதையும் நுண்மேலாண்மை செய்வது, கொள்கை வகுப்பவர்களின் அதிகாரப் பிரிவைச் சார்ந்தது. இந்த விதத்தில் உச்ச நீதிமன்றம் ‘தனது சட்ட எல்லைகளை நீட்டியுள்ளது’ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவுக்கான நீதிமன்றத்தின் தர்க்கபூர்வ காரணம்:

பல பொதுநல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தன் சட்ட எல்லையை விஸ்தரித்து சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளைதை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த மதுபான தடை விவகாரத்தில் நீதித்துறை சட்ட எல்லை என்பதையும் நியாயப்படுத்தி தனது உத்தரவுகளுக்கான நியாயங்களை நீதிமன்றம் பேசியுள்ளது. எனவே நாம் நீதிமன்றத்தின் தர்க்கத்தை பரிசீலனை செய்து பார்ப்போம்.

மார்ச் 31-ம் தேதி மீண்டும் வலியுறுத்திய தனது டிசம்பர் 15-ம் தேதி உத்தரவில் உச்ச நீதிமன்றம் அரசுக் கொள்கை ஆவணங்களை சுட்டிக்காட்டி மதுபானம் அருந்துதலுக்கும் சாலை விபத்துகளுக்குமான தொடர்பை எடுத்துரைத்தது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ‘நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு புதிய உரிமம் அளிக்க வேண்டாம்’ என்று சுற்றறிக்கை அனுப்பியதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனவே மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இத்தகைய உரிமங்களை வழங்கலாமா என்றால் நாங்கள் கூடாது என்றே கூறுவோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் இது இரண்டு வேறுபட்ட கேள்விகளை ஒதுக்கி விடுகிறது: ஒரு பிரச்சினை குறித்து என்ன செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? என்ற கேள்விகளை அதன் உத்தரவு ஒதுக்கி விடுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை நெடுஞ்சாலைகளுக்கு அருகே மதுபான விற்பனைக்கான உரிமங்களை அரசு வழங்கலாமா என்ற கேள்விக்கான பதில் நீதிமன்றங்கள் அளிக்கக்கூடாது, அது எந்த விதமான விடையாக இருந்தாலும் சரி. இந்த உத்தரவுக்காக மத்திய அரசின் ‘நிபுணர் குழு’-வின் தீர்வை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது உதவாது. ஏனெனில், ஒன்றைப்பற்றிய அரசின் கருத்து சரியா அல்லது இல்லையா என்பதல்ல பிரச்சினை. அரசின் கருத்தின் மீது யார் செயல்பட வேண்டும், யார் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை.

நீதிமன்றத்துக்கே தனது வாதத்தின் போதாமை தெரிந்திருக்கிறது. ஏனெனில் சட்டப்பிரிவு 21-ன் கீழ் அது தனது உத்தரவை நியாயப்படுத்தியுள்ளது. இந்த சட்டப்பிரிவு வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதாவது நீதிமன்றம் தனது கொள்கையை திணிக்கவில்லை மாறாக சட்டப்பிரிவு 21-ன் படியே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறுகிறது.

சட்டப்பிரிவு 21-ம், பலவீனமான ஆதாரமும்

சட்டப்பிரிவு 21 என்பது தனிநபர் வாழ்வுக்கான உரிமையை மறுக்கும் அரசுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல, உயிரிழப்பு ஏற்படும் போது மாநிலம் செயல்படாமல் இருப்பதற்கு எதிராகவும் சட்டப்பிரிவு 21 செயல்படும். அதாவது மற்றொரு விதமாக கூற வேண்டுமெனில் சாலைகளுக்கு அருகில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் அளிக்காமல் அரசு மறுத்திருந்தால் சாலை மரணங்கள் தவிர்க்கப்படலாம், மாநில அரசு இதனைச் செய்யாதது, சட்டப்பிரிவு 21-ன் கீழ் அரசு தன் கடமையிலிருந்து தவறுகிறது என்று பொருள். எனவே அரசு செயல்பட வேண்டும் என்று உத்தரவிடலாம். எனவே தீர்ப்பின் சட்ட அடித்தளம் இது என்றால், அதிலும் இரண்டு விஷயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது மாநில அரசுகளின் செயலின்மையையும் உயிர்ப்பலியையும் தொடர்பு படுத்தி சட்டப்பிரிவு 21 மீறப்பட்டுள்ளது என்று கூறலாம். மக்களின் உயிர் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது ஏற்படுத்தாத விதமாகவோ பல விஷயங்களை அரசு செய்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, அரசு சத்தில்லாத சக்கை உணவை தடை செய்தால் (Junk Food) நீண்ட ஆயுளுடன் மக்கள் வாழலாம், மாரடைப்பினால் சில மரணங்கள் நிகழலாம். ஆனால் இதுவே அனைத்து சக்கை உணவையும் நீதிமன்றம் தடை செய்ய அடிகோலாது. அதாவது அரசியல் சாசன சட்டம் பிரிவு 21- படி அரசு தன் கடைமையைச் செய்ய தவறியதாகக் கூறி சக்கை உணவு அனைத்தையும் நீதிமன்றம் தடை செய்ய முடியாது.

மேலும் நீதிமன்றத்தின் முடிவு இன்னும் உறுதியான ஆதார அடிப்படைகளிலேயே அமைந்திருக்க வேண்டும்.

முழுநிறைவான நீதி...

கடைசியாக, அரசியல் சாசன சட்டப்பிரிவு 142-ன் கீழ் உத்தரவுகளை பிறப்பிப்பதாக விளக்கம் அளித்து முடிவுகட்டியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த சட்டப்பிரிவு உச்ச நீதிமன்றம் தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கிலும் முழுமையான நீதி அளிக்க அதிகாரம் அளிக்கிறது. ஆனாலும், ’நீதிமன்றம் அதன் சட்ட எல்லைக்குட்பட்டு’ செயல்படுமாறும் இச்சட்டப்பிரிவினால் நீதிமன்றம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்றம் தனது நீதி குறித்த பார்வையை அமல்படுத்த அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 142 வரம்பற்ற அதிகாரத்தை வழங்கவில்லை. ஆட்சியதிகாரத்தின் கொள்கை முடிவுக்குட்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஆக்ரமிக்கவில்லை என்பதற்கான காரணங்களை உச்ச நீதிமன்றம் கறாராக வைக்கவில்லை. எனவே தற்போது இதன் பலமைய பிரச்சினைப்பாடுகள் தோற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது எல்லையை கொஞ்சம் கூடுதலாகவே நீட்டித்துள்ளதாகவே தெரிகிறது.

கட்டுரையாசிரியர் கவுதம் பாட்டியா டெல்லியில் வசித்து வரும் வழக்கறிஞர்

SCROLL FOR NEXT