சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் மற்றும் அவரது மனைவியை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. முதல்வராக வீர்பத்ர சிங் (82) பதவி வகிக்கிறார். இவர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படை யில் வீர்பத்ர சிங், இவரது மனைவி பிரதிபா சிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதை எதிர்த்து இமாச்சல் உயர் நீதிமன்றத்தில் வீர்பத்ர சிங் வழக்கு தொடர்ந்தார். வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது. பின்னர் வீர்பத்ர சிங், அவரது மனைவியை சிபிஐ கைது செய்ய இடைக்கால தடை விதித்து, கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரையில் அவர்களிடம் விசாரணை நடத்தவோ, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ கூடாது என்று இமாச்சல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின், முதல்வர் வீர்பத்ர சிங் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத் துக்கு மாற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடு விக்கக்கோரி டெல்லி உயர் நீதி மன்றத்தில் வீர்பத்ர சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கி நேற்று விசாரித்தார். பின்னர் வீர்பத்ர சிங்கின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார். மேலும், இமாச்சல் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் வீர்பத்ர சிங் மற்றும் அவரது மனைவி பிரதிபா சிங் ஆகியோர் மீது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப்பத்திரிகையில் வீர்பத்ர சிங் உட்பட 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.