மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிய டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் சயீத் அகமது புகாரிக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொழு கைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அகமது புகாரி, மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.
இது குறித்து ஷியா பிரிவு முஸ்லிம் களின் தலைவரான கல்பே ஜவ்வாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் சிறுபான்மையினருக்கு எதிராக பல அநீதிகளை இழைத்துள்ளன” என்றார். எனினும், எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
ஆசம்கரை சேர்ந்த தேசிய உலமாக்கள் கவுன்சில் தலைவர் ஆமீர் ரஷீதி கூறுகையில், “சோனியா காந்தியின் இருப்பிடத்துக்குச் சென்று இமாம் புகாரி சந்தித்தது தவறு. இந்த சந்திப்பில் இருவருக்கு மிடையே மேற்கொள் ளப்பட்ட மtறைமுக ஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம்களின் நலனைப் பேண காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. எனவே, முஸ்லிம் மக்கள், தங்களின் விருப்பத்தின்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். இந்திய முஸ்லிம்கள் புகாரியின் சொத்து அல்ல” என்றார்.
லக்னோவில் உள்ள பிராங்கி மெஹல் ஈத்காவின் இமாம் மவுலானா காலீத் ரஷீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது போன்ற மத ரீதியான கோரிக்கைகள் நம் நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கும். இதற்கு முன்பு பாரதிய ஜனதாவிற்கும், சமாஜ் வாதிக் கட்சிக்கும் புகாரி ஆதரவு அளித்துள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு
காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதை சயீத் அகமது புகாரி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
புகாரியின் கருத்தை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “மதத்தலைவர்களை அணுகுவதன் மூலம் அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்கும் என்று அரசியல் கட்சிகள் கருதுகின்றன. அதே போன்று, கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் தங்களின் சமூகத்திற்கு ஆதாயம் கிடைக்கும் என்று மதத் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், இவை இரண்டும் உண்மை அல்ல” என்றார்.
இமாம் சயீது அகமது புகாரி யார்?
வட இந்திய முஸ்லிம்களின் முக்கிய மதத்தலைவராகக் கருதப்படும் சயீது அகமது புகாரி, டெல்லி ஜும்மா மசூதியின் பேஷ் இமாமாக கடந்த 2000 அக்டோபர் முதல் பணியாற்றுகிறார்.
இந்த மசூதியை கட்டிய மொகலாய மன்னர் ஷாஜகானின் வேண்டுகோளுக்கு இணங்க பேஷ் இமாம் பணிக்காக இராக்கிலுள்ள புக்ராவிலிருந்து இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர் சையது அப்துல் கபூர் ஷா புகாரி. இவர் முஸ்லிம்களின் இறைத்தூதரான முகம்மது நபியின் வம்சாவழி வந்தவர். அப்போது முதல் புகாரி குடும்பத்தினர் வகிக்கும் பேஷ் இமாம் பணியில் அகமது புகாரி இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாளராக இருந்த புகாரி, கடந்த ஆண்டு மார்ச்சில் தனது உறவுகளை முறித்துக் கொண்டு சமாஜ்வாதிக்கு எதிராக பேசத் தொடங்கினார்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளான ரம்ஜான் மற்றும் பக்ரீத் கொண்டாடும் நாட்களுக்காக பிறை பார்க்கப்பட்டவுடன் அதை புகாரியே அறிவிப்பார். இதையே நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இதை சாதகமாக வைத்து தேர்தல் சமயங்களில் புகாரி கூறும் அரசியல் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி விடுகின்றன. இந்தவகையில், முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியதும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.