இந்தியா

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல்: உச்ச நீதிமன்ற விசாரணை வளையத்தில் இந்திய ஊடகங்கள்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இந்திய ஊடகவியலாளர்கள் சிலர் சாதகங்களைப் பெற்றதாக உச்ச நீதிமன்ற விசாரணை வளையத்தின் கீழ் வந்துள்ளனர்.

அதாவது, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஃபின்மெக்கானிகா ஆகியவற்றுடனான காப்டர் ஒப்பந்தத்திற்குச் சாதகமாக செய்திகளை வெளியிடுவதற்காக சாதகப் பலன்களை அடைந்துள்ளதாக செய்திகள் எழுந்துள்ளதையடுத்து முக்கிய பத்திரிகையாளர்கள் சிலர் உச்ச நீதிமன்ற விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ஹரி ஜெய்சிங் மேற்கொண்டுள்ள மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அருண் மிஷ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்றிக் கொண்டுள்ளது.

அந்த மனுவில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர், இந்த ஊழலில் ஊடகங்கள் சிலவற்றின் தொடர்புகள் குறிட்து இரண்டு விசாரணை அமைப்புகளும் அறிக்கைத் தாக்கல் செய்ய ஹரி ஜெய்சிங் கோரியுள்ளார்.

இவரது மனுவின் நகல்களை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவிரனரிடம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 2013-ல் விதிமுறைகளை மீறி 12 ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.3,727 கோடி ரூபாய் ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாக தலைமைத் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முக்கிய பத்திரிகையாளரான ஹரி ஜெய்சிங், ஊடகங்களின் தொடர்பு குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட தன் மனுவில் கோரியுள்ளார்.

இதுகுறித்து கசிந்த ரகசிய ஆவணங்களைச் சுட்டிக்காட்டிய ஜெய்சிங், “ராணுவ ஆயுத ஒப்பந்த முகவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இருக்கும் நெருக்கமான உறவுகளை கோர்ட் விசாரிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

மேலும் அவர் தன் மனுவில், பத்திரிகையாளர் என்பவர் மக்கள் சேவகர்தான். எனவே இவர்கள் தங்கள் தொழிலின் புனிதத்தையும் நேர்மையையும் காப்பது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாட்டு, உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தித்துறையிடமிருந்து ஊடகவியலாளர்கள் பெற்ற சாதகங்கள், நிதி நன்கொடைகள் பற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்துமாறும் ஹரி ஜெய்சிங் தன மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஃபின்மெக்கானிகா நிறுவன சி.இ.ஓ. ஜியுசெப் ஆர்சி, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் சி.இ.ஓ. புரூனோ சாப்கிளியானி ஆகியோர் இந்திய அரசு அதிகாரிகளை ‘கவனிக்க’ கிறிஸ்டியன் மைக்கேல் என்பவரிடம் ரூ.217 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார் ஜெய்சிங்.

இந்த ரூ.217 கோடியில் ஊடகங்களை கவனிக்க மட்டும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டதாக அவர் தன் மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.

“2013-ல் இதே கிறிஸ்டியன் மைக்கேல் ஃபின்மெக்கானிகா நிறுவனத்தின் அழைப்பின் பேரில் இந்திய பத்திரிகையாளர்களை இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்” என்று ஜெய்சிங் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT