பெரியாறு அணையில் புகுந்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தாக்கி விட்டு பேபி அணையை சேதப்படுத்த முயன்ற கேரள எம்எல்ஏ மற்றும் ஆதர வாளர்களுக்கு தேனி மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை142 அடியாக தேக்கும் பொருட்டு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அவ்வப் போது அணையின் நீர்மட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். இன்று மாலைக்குள் 142 அடியாக உயர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்று துணைக் குழு ஆய்வு மேற் கொள்ள உள்ளது.
இதற்கிடையில் அணை நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என கேரள அரசு, தமிழக அதிகாரிகளிடம் கூறிவந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இடுக்கி மாவட்டம் பீர்மேடு எம்எல்ஏ பிஜுமோள் தலைமையில் 40க்கும் மேற்பட்டவர்கள் கேரள வனத்துறைக்குச் சொந்தமான படகு மூலம் அணைப்பகுதியில் திடீரென புகுந்தனர். அவர்களை கண்டதும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதற்காக அணை பகுதிக்கு வந்தீர்கள், வெளியாட்கள் வர அனுமதியில்லை என வழிமறித்துள்ளனர்.
வேடிக்கை பார்த்த போலீஸார்
ஆனால் அவர்கள் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு பெரியாறு அணை அருகில் உள்ள பேபி அணை சுவர்களை சேதப்படுத்த முயற்சித்தனர். சிறிது நேரத்தில் வந்த படகிலேயே திரும்பிச் சென்றுவிட்டனர். தாக்குதலுக்கு ஆளான தமிழக அதிகாரிகள் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கேரள போலீஸாரிடம் முறையிட்டனர். ஆனால் தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என கேரள போலீஸார் கைவிரித்துவிட்டனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், எம்எல்ஏ தலைமையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள் எங்களை தாக்கினர். தடுக்க முயன்ற பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன் கடுமையாகத் தாக்கப் பட்டார். அம்மாநில போலீஸார் முன்னிலை யிலேயே இது நடந்தது. ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர் என்றார்.
விவசாயிகள் கொந்தளிப்பு
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி கள் தாக்கப்பட்ட சம்பவம் தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர் பாக முல்லை பெரியாறு அணை மீட்புக் குழு தலைவர் ரஞ்சித் கூறுகையில், தமிழக அதிகாரிகளை தாக்கிவிட்டு பேபி அணையை சேதப்படுத்த முயன்ற நபர்களை உடனே கைது செய்யவேண்டும். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் தமிழக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உடனடியாக தமிழக போலீஸாரை அனுப்பி வைக்கவேண்டும் என்றார்.