இந்தியா

தமிழக மீனவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முழு விசாரணைக்கு இலங்கை உறுதியளிப்பு: ஹமீது அன்சாரி தகவல்

பிடிஐ

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று சிறிசேனா உறுதியளித்துள்ளதாக இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.

இந்தோனேசிய தலை நகர் ஜகார்தாவில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்து கொண்டுள்ளார். இதில் இலங்கை அதிபர் சிறிசேனாவும் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஹமீத் அன்சாரி, சிறிசேனாவை சந்தித்து பேசியுள்ளார்.

இரண்டு நாள் ஜகார்தா பயணத்தை முடித்து திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹமீது அன்சாரி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை கடற்படை தளபதியிடம் பேசினேன். இலங்கை கடற்படை அம்மாதிரி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. மேலும் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.

இது தொடர்பாக இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் பேசியுள்ளதாக ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

மேலும் மீனவர்கள் தொடர்பாக அடிக்கடி எழும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய துணை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் திங்கட்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ப்ரிட்ஜோ (21) என்ற இளைஞர் பலியானார். ஒருவர் காயமடைந்தார்.

எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றத்துக்காக 76 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT