ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே, விநாயகர் சதுர்த்தியின்போது படைக்கப்பட்ட 7,858 கிலோ எடையுள்ள மெகா லட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பக்த ஆஞ்சநேயா பலகாரக் கடை சார்பில், 7,858 கிலோ எடையுள்ள மெகா லட்டு தயாரிக்கப்பட்டு தபேஸ்வரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு படைக்கப்பட்டது.
இந்த மெகா லட்டு குறித்து, கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பிக்கப்பட்டது. இதனை கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை கடை உரிமையாலர் எஸ். சத்தியநாராயண மூர்த்திக்கு அனுப்பி வைத்துள்ளது.
முன்னதாக, 2011-ம் ஆண்டு 5,570 கிலோ எடையிலும், 2012-ல் 6,599.29 கிலோ எடையிலும், 2013-ம் ஆண்டு 7,132.87 கிலோ எடையிலும் இவர் மெகா லட்டுகளைத் தயாரித்து, விநாயகருக்குப் படைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தனது சொந்த சாதனையை முறியடிப்பதே இலக்கு என சத்திய நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.