இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதிக்கு எதிரான மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

ஏஎன்ஐ

திமுகவைச் சேர்ந்த முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், தனது பதவி காலத்தில் ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, அதன் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்தார். இதற்கு பதிலாக தனது குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் ரூ.742.58 கோடியை மேக்சிஸ் நிறுவனம் மூலம் முதலீடு செய்ய வைத்தார் என புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன், மனைவி காவேரி கலாநிதி மற்றும் 4 பேருக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் குற்றச்சாட்டு பதிவு செய்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தயாநிதி, கலாநிதி, காவேரி கலாநிதி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான மனுவை நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது இந்த மனு மீதான தீர்ப்பை வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.

SCROLL FOR NEXT