இந்தியா

சுனந்தா மரணம் தொடர்பாக தடய அறிவியல் சோதனை

செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணையின்போது கிடைத்த லேப்டாப், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை மேம்பட்ட தடய அறிவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன‌.

சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் எனும் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியின் 345வது அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லேப்டாப், 3 கைப் பேசிகள் ஆகியவை கைப்பற்றப் பட்டன. தற்போது அவற்றில் முக்கியமான விஷயங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிந்துகொள்வதற்காக, டெல்லி காவல்துறை அவற்றை மேம்பட்ட தடய அறிவியல் சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளது.

மேலும், சுனந்தா தன் இறுதிக் காலத்தில் தன் இரண்டு மின்னஞ்சல்கள் மூலம் யாருடன் எல்லாம் தொடர்புகொண்டார் என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, சுனந்தாவின் உடலில் விஷம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது என்ன வகையான விஷம், அது எவ்வாறு சுனந்தாவின் உடலில் செலுத்தப்பட்டது என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் எதுவும் கூறவில்லை.

SCROLL FOR NEXT