‘‘மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதர் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ். இவர் பணியை விட்டு ஈரான் சென்றார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த குல்பூஷண், கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானில் உளவு பார்க்க ஊடுருவியதாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது.
அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது திட்டமிட்ட கொலையாகவே கருதப்படும். மேலும், இரு நாட்டு உறவு பெரும் சிக்கலாகி விடும். பின்விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்று இந்திய அரசு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரி சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே நேற்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் டெஹ்மினா ஜன்ஜுவாவை சந்தித்து இந்தத் தகவலை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜாதவ் கைது செய்யப்பட்ட பிறகு அவரை சந்திக்க வேண்டும் என்று 12 முறை இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், சர்வதேச மனிதாபிமான நடவடிக்கையாக ஜாதவைச் சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையில் ஜாதவை சந்திக்க அனுமதிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.