ஓ.பன்னீர்செல்வமா - சசிகலாவா என்பது குறித்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி, பலப்பரீட்சை நடத்த உத்தரவிடலாம் என்று தமிழக ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் சட்ட ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் நிலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இப்பிரச்சினை குறித்து சட்ட ஆலோசனை வழங்கும்படி, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கியிடம் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கோரியிருந்தார். ஆளுநருக்கு அவர் அளித்துள்ள ஆலோசனையில், ‘ஜெகதாம்பிகா பால் வழக்கில், கடந்த 98-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதேபோன்ற நிலை ஏற்பட்டபோது, ஜெகதாம்பிகா பால் மற்றும் கல்யாண் சிங் இடையே ஒரே நேரத்தில் சட்டப்பேரவையில் பலப்பரீட்சை நடத்தி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்திலும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் கூட்டி, எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை கண்டறியலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே, சசிகலாவுக்கு பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதால், அவரை ஆட்சியமைக்க அழைக்கும்படி, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பிலும், இதேபோன்ற மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சசிகலா பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருப்பதால், இந்த தீர்ப்பைப் பொறுத்து, சசிகலா தொடர்பாக தாக்கலாகி உள்ள மனுக்கள் மீதான விசாரணை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 98-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு 22 உறுப்பினர்களைக் கொண்ட லோக்தந்திரிக் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது. இந்த மாற்றத்தையடுத்து, அம்மாநில ஆளுநர் ரமேஷ் பண்டாரி, கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்தார். லோக்தந்திரிக் காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால், கல்யாண் சிங் ஆகிய இருவருமே தங்களுக்கு ஆட்சியமைக்க போதுமான ஆதரவு இருப்பதாக கூறினர். இதனால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றம் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி, ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தி யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை பார்க்கும்படி உத்தரவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில், முன்மாதிரியாக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் பலப்பரீட்சை நடந்தது.
மொத்தம் 422 உறுப்பினர்கள் இருந்த சட்டப்பேரவையில் கல்யாண் சிங் 225 வாக்குகளைப் பெற்று 29 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜெகதாம்பிகா பால் 196 வாக்குகள் பெற்றார். சபாநாயகர் கேசரிநாத் திரிபாதி ஒரு பெரிய வாக்குப் பெட்டியை சட்டப்பேரவையில் வைத்தார். எம்எல்ஏ- க்கள் வாக்குச் சீட்டில் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை நிரப்பி கையெழுத்திட்டு அதில் போடும்படி செய்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாக்கெடுப்பு தற்போது தமிழக சட்டப்பேரவைக்கும் முன்மாதிரியாக அமையவுள்ளது.