இந்தியா

‘ரயில்வே துறை பறிக்கப்பட்டதில் வருத்தம் இல்லை’: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி

செய்திப்பிரிவு

ரயில்வே துறை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதால் வருத்தப்பட வில்லை என மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத‌ நிலையில் அவர் சட்டம் மற்றும் நீதித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு கர்நாடகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “சதானந்த கவுடாவிடம் இருந்து ரயில்வே துறை பறிக்கப்பட்டதன் மூலம் கர்நாடகாவுக்கு பாஜ‌க அநீதி இழைத்துவிட்டது” என கருத்து தெரிவித்திருந்தார்.

மோடிக்கு தெரியும்

இந்நிலையில் புதன்கிழமை கர்நாடக மாநிலம் தும்கூரில் சதானந்த கவுடா செய்தியாளர் களிடம் கூறியதாவது:

என்னை மத்திய ரயில்வே துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றியதால் கர்நாடகத்திற்கு பாஜக எவ்வித அநீதியும் இழைக்கவில்லை.இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும், எனது ஆதரவாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் விமர்சிக்கக்கூடாது.

என்னிடமிருந்து ரயில்வே துறை பறிக்கப்பட்டதால் எனக்கு எந்த வருத்தமோ கவலையோ இல்லை. இதுவிஷயத்தில் நான் அதிருப்தி அடைந்திருப்பதாக ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிடுகின்றன. தற்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் துறையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பாக செயல்படுவேன்.

யாருக்கு என்ன பொறுப்பு வழங்க‌ வேண்டும் என்பது பிரதமர் நரேந்தி மோடிக்கு தெரியும். அவர் பல முறை யோசித்து அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார். தற்போது ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சுரேஷ் பிரபு மிகச் சிறப்பாக செயல் படுவார். அவருக்கு நல்ல அனுபவமும், நிர்வாக திறமையும் இருக்கிறது.

ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்காத தால் எனது துறை மாற்றப் பட்டதாகக் கூறுவதை ஏற்க மாட்டேன். என்னுடைய பதவக் காலத்தில் சிறப்பாக செயல் பட்டுள்ளேன் என்று நம்புகிறேன்.

SCROLL FOR NEXT