ஆசிய விளையாட்டுப் போட்டி யில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்த விவகாரத்தில், அவருக்கு எதிராக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வாழ்நாள் தடை விதிக்க விடாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என மக்களவையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத் தினார்.
மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் பேசும்போது, “கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில், அரையிறுதியில் சில விஷயங்கள் சரியாக நடந்திருந்தால் சரிதா தேவி தங்கப் பதக்கம் வென்றிருப்பார். அவருக்குரிய கவுரவம் மறுக்கப்பட்டுள்ளது. சரிதா தேவிக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது.
அவருக்கு எதிராக வாழ்நாள் தடை விதிக்கப்படாமல் இருக்க இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிடவேண்டும்” என்றார்.
பாஜக உறுப்பினர் ரமேஷ் பொக்ரியால் பேசும்போது, “அமைதிக்கு பெயர்போன உத்தராகண்ட் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ளன. அங்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கருணாகரன், காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கேரளத்தில் ரப்பர் விவசாயிகள் பிரச்சினையை எழுப்பினர்.
“ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். ரப்பர் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
கங்கை அசுத்தமடைந்து வரும் விவகாரத்தை பாஜக உறுப்பினர் ஜகதாம்பிகா பால் எழுப்பினார். பகல்பூரில் பாட்னா உயர்நீதிமன்ற பெஞ்ச் அமைக்க வேண்டும் என்று அஸ்வினி குமார் சவுபே (பாஜக) கோரினார்.