இந்தியா

ஹிண்டால்கோ விவகாரத்தில் பரேக்கிடம் பதில் இல்லை: சிபிஐ

செய்திப்பிரிவு

முதலில் நிராகரிக்கப்பட்ட ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கியது ஏன் என்ற கேள்விக்கு நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோவுக்கு ஒடிசாவில் உள்ள 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அந்தச் சுரங்கங்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மகனாடி கோல்ஃபீல்ட்ஸ் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன.

ஆனால், திடீரென அந்த முடிவை மாற்றி ஹிண்டால்கோவுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியது ஏன் என்று பரேக்கிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

முதலில் விண்ணப்பம் அளித்த நிறுவனம் என்ற அடிப்படையில் ஹிண்டால்கோவுக்கு சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன என்று மட்டுமே பதிலளித்தார் என சிபிஐ தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த முறைகேடு விவகாரத்தில் பிரதமருக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ அதே அளவு பொறுப்புதான் தனக்கும் உள்ளது. எனவே, பிரதமரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று பரேக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோர் மீது சில நாள்களுக்கு முன்பு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் பி.சி. பரேக்கிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

SCROLL FOR NEXT