ஆந்திராவில் சிறுவன் ஒருவன் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று காலை ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத் மெஹதி பட்டினம் பகுதியில் ராணுவ வளாகம் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 9-ம் தேதி சித்திக் நகரைச் சேர்ந்த முஸ்தபா (11) மர்மமான முறையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தான். முஸ்தபா அளித்த மரணவாக்கு மூலத்தில், ராணுவ வீரர் ஒருவர் தன்னை எரித்ததாக தெரிவித்தான்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று ராணுவ முகாமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பல் ராஜு எனும் ராணுவ வீரர் அதிகாலை 4 மணியளவில்,துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அப்பல் ராஜுவின் உடல் அவரது மனைவி அனு சுயாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனது கணவர் நிரபராதி என்றும், விசாரணையின்போது போலீஸார் நடந்து கொண்ட முறையால் அவமானப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அனுசுயா குற்றம்சாட்டி உள்ளார்.