மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தால் அதை நடத்தும் பெருநிறுவனங்கள் மட்டுமே பலன் கிடைப்பதாக தமிழக விவசாய சங்கங்கள் கூறியுள்ளனர். டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு வந்தவர்கள், இது குறித்து அவர்கள் ‘தி இந்து’விடம் கூறிய கருத்துகள் பின்வருமாறு:
பி.அய்யாகண்ணு, தலைவர், தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம்: காப்பீடுக்காக பணம் கட்டிய விவசாயிகள் பாதிப்படைந்த போதும், அதன் பலன் இதுவரை யாருக்குமே கிடைக்கவில்லை. இந்த திட்டத்தின்படி மாவட்டம் முழுவதிலும் பாதிப்பு ஏற்பட்டால் தான் காப்பீடு தொகை கிடைக்கும். இது தாலுக்கா, ஒன்றியம் எனப் படிப்படியாகக் சுருங்கி கடந்த வருடம் கிராம அடிப்படையில் அளிப்பதாக கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இதற்கானப் பிரிமியம் தொகை கட்டுவதால் அதை நடத்தும் பெருநிறுவனங்களுக்குத் தான் லாபமே தவிர விவசாயிகளுக்கு அல்ல. இதுவரை ஒரு விவசாயிக்கும் இதன் பலன் கிடைக்கவில்லை. எனவே, காப்பீடு திட்ட அம்சங்கள் ப்லன் அளிக்கும்படி மாற்றி அமைப்பது அவசியம்
பி.ஆர்.காவேரி பாண்டியன், ஒருங்கிணைப்பாளர், தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு: தமிழகத்தில் உள்ள 88 லட்சம் விவசாயிகளில் வெறும் எட்டு லட்சம் பேர் தான் காப்பீடு செய்துள்ளனர். இதில் நான்கு கட்டங்களாக இழப்பீடு தொகை அளிக்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியும் பலன் கிடைக்காமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பிரிமியம் மற்றும் இழப்பீடு தொகையில் ஒரு குறிப்பிட்ட பங்கினை பகிர்ந்து கொள்கின்றன. இழப்பீட்டில் சென்ற 2015-16 ஆண்டிற்கானது இன்னும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை. இதற்கு தங்களிடம் நிதி இல்லை எனக் கூறி தமிழக அரசு காலம் கடத்துகிறது. தனியாரை ஊக்கப்படுத்தும் நோக்கம் காரணமாக, மத்திய அரசு அதற்கான தொகையை தனது பட்ஜெட்டிலேயே ஒதுக்கி விடுகிறது. காப்பீடின் பிரிமியத்திற்கான தொகை கடந்த வருடம் அதிகரிக்கப்பட்டது. இதனால், அதன் பெருநிறுவனங்களுக்கு தான் லாபமே தவிர விவசாயிகளுக்கு அல்ல..
இளங்கீரன், தலைவர், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு: தமிழக விவசாயிகள் சங்கம்: நீண்டகாலப் போராட்டத்திற்கு பின் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது பயிர் காப்பீடு. இதை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மகசூலுக்கு ஏற்ப பாதிப்பு தொகை அளிப்பதற்காக அமலாக்கப்பட்டது. தேசிய வேளாண்காப்பீடு திட்டம் எனும் பொதுத்துறை நடத்தி வந்ததை 12 தனியார் பெருநிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் அது, வெற்றிகரமாக செயல்படும் என விவசாயிகளுக்கும் நம்பிக்கை இல்லை. இதை புரிந்து கொண்ட அரசு அதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு செல்லப்படாமல் பெயரளவிலேயே உள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடையாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.