டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. பாஜக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓக்லா தொகுதி எம்எல்ஏவான அமானதுல்லா கான், கட்சியின் முக்கிய நிர்வாகி குமார் விஸ்வாஸ் பாஜக- ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார். அதன்பின் கட்சியின் அரசியல் விவகாரக்குழு பதவியில் இருந்து விலகுவதாகவும் அமானதுல்லா கான் அறிவித்தார்.
இந்த நிலையில், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்திய அமானதுல்லா கான் மீது கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க இருப்பதாக குமார் விஸ்வாஸ் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான சூழலில், நேற்று முன்தினம் இரவு முதல்வர் இல்லத்தில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சஞ்சய் சிங், ஆசுதோஷ் உள்ளிட் டோருடன் கேஜ்ரிவால் ஆலோ சனை நடத்தினார். அதன்பின் நள்ளிரவு காஸியாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் சென்றனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குமார் விஸ்வாஸ் சமாதானம் அடைந்த தாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகும் முடிவில் இருந்து இறங்கி வந்தார். இதையடுத்து, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சதி வேலையில் ஈடுபட்டதாகக் கூறி, அமானதுல்லா கானைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு (2018) சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஆம் ஆத்மி பொறுப் பாளராக குமார் விஸ்வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.