சிபிஐ தலைமை பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும். சிபிஐ புதிய இயக்குநரின் பெயர் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படலாம் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெற்றார். ராகேஷ் அஸ்தானா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதில் சட்ட ரீதியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழு கூடி ஏன் விவாதிக்கவில்லை என, கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனைத்தொடர்ந்து பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட உயர் அதிகாரம் பெற்ற குழு டெல்லியில் நேற்று முன்தினம் கூடி விவாதித்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஏஎம் கான்வில்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி கூறும்போது,
‘சிபிஐக்கு புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழு கூடி விவா தித்துள்ளது. நியமனம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும். இம் மாதம் 20-ம் தேதி சிபிஐயின் புதிய இயக்குநரின் பெயர் அறிவிக்கப்படலாம்’ என்றார்.
புதிய இயக்குநராக நியமிக் கப்பட வாய்ப்புள்ளவர்கள் பட்டி யலை உயர் அதிகாரம் கொண்ட குழு பரிசீலித்தது தொடர்பான ஆவணங்களையும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதி பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிறப்பு இயக்கு னர் ஆர்.கே.தத்தா திடீரென மத்திய உள்துறை சிறப்புச் செயலாளராக மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அட்டர்னி ஜெனரல் ரோஹத்கி மறுத்தார்.