மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று முறையிட்டனர். ஜனநாயகத்தை காக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவரிடம் வலியுறுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக எடுக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் பிரணாபிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் மனு ஒன்றும் வழங்கப்பட்டது. அதில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்புக்குப் பின் மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் பாதுகாப்பற்ற மற்றும் அச்சம் நிறைந்த சூழ்நிலை நிலவுகிறது. எதிர்ப்பு குரல்களை ஒடுக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாபிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசு இயந்திரங்கள் அரசியல் தலைவர்களை, குறிப்பாக மாநில முதல் வர்களை பழிவாங்க பயன் படுத்தப்படுகிறது
ஜனநாயகத்தில் சட்டத் தின் ஆட்சி தான் நடைபெற வேண்டும். ஆனால் சில தீய சக்திகள் வன்முறையில் ஈடுபடுகின்றன. குடிமக்கள் மீது கொலைவெறி கும்பல் தாக்குதல் நடத்தும் சம்பவங் களும் நிகழ்ந்து வருகின்றன. ராஜஸ்தானில் மாட்டுப் பண் ணை விவசாயி கொல்லப் பட்டுள்ளார். குஜராத்தின் உனா, உத்தரபிரதேசத்தின் தாத்ரி, ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் ஆகிய இடங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதிகார துஷ்பிரயோகம்
பாஜக அரசு அல்லாத பிற மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப் படுகின்றன. செயற்கையான பெரும் பான்மை பலம் உருவாக்கப்படுகிறது கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களே இதற்கு சமீபத்திய உதாரணங்களாக இருக்கின் றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்கள் குறித்தும் குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.
நாளந்தா போன்ற பல்கலைக்கழ கங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படு கின்றன. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நீடிக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு நிர்வாகம் இருக்கிறது. இத்தகைய சூழல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட அந்த மனுவில் தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ்) சதீஷ் சந்திர மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), தர்மேந்திர யாதவ் மற்றும் நீரஜ் சேகர் (சமாஜ்வாதி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சுக்கேந்து சேகர் ராய் மற்றும் கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்) சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தாளம்) இளங்கோவன் (திமுக) உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அமைச்சர் குற்றச்சாட்டு
இதற்கிடையே, மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெற்ற தொடர் தோல்வி காரணமாகவே அரசுக்கு எதிரான இத்தகைய பொய் பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.